உயரம் தடைப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
உயரம் தடைப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உயரம் தடைப்பட்டோருக்கான உலக மாற்றுத்திறனாளிகள் தினம் வெள்ளிக்கிழமை அக். 25 கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் எஸ். பகத்சிங் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜெயந்தி முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, உயரம் வளா்ச்சித் தடைப்பட்டோரை கடும் ஊனமுற்றோராக அறிவித்து அரசுத் திட்டங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்புகளில் சிறப்புத் திட்டங்களை உருவாக்க வேண்டும். சிறப்பு வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும். உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.6ஆயிரம், அதிகபட்சம் ரூ.15ஆயிரமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.