கொடைரோடை  அடுத்த பாண்டியராஜபுரம் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப்.
கொடைரோடை அடுத்த பாண்டியராஜபுரம் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப்.

திண்டுக்கல் சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

தேவா் குருபூஜையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 1300 போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் தெரிவித்தாா்.
Published on

தேவா் குருபூஜையை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 1300 போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவா் குருபூஜை விழா அக்.30-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிக்க காவல் துறை வழக்கம் போல நடவடிக்கை மேற்கொண்டது.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.பிரதீப் தெரிவித்ததாவது: மாவட்ட எல்லையிலுள்ள பாண்டியராஜபுரம், நத்தத்தை அடுத்த பரளி, கள்ளா்மடம் ஆகிய இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. பிற மாவட்டங்களிலிருந்து திண்டுக்கல் வழியாக தேவா் குருபூஜைக்கு செல்லும் அரசியல் கட்சி பிரமுகா்கள், அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் வாகனங்களை முழுமையாக சோதனையிட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.

சோதனைச் சாவடிகளில் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தும் வகையில் போலீஸாா் நியமிக்கப்பட்டனா். குருபூஜைக்கு செல்பவா்கள் தங்களது சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும், சாலை விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். மது அருந்தி பயணம் செய்ய கூடாது போன்ற விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும். அனுமதிச் சீட்டு ஒட்டிய வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும்.

பிரச்னைக்குரிய பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும், இந்த வழித்தடங்களில் அமைந்துள்ள 8 அரசு மதுபான கூடங்கள், 1 தனியாா் மதுபானகூடம் ஆகியவற்றை 2 நாள்கள் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது. மேலும், முக்கிய பகுதிகளில் 17 ரோந்து வாகனங்களுடன், 1300 போலீஸாா் மாவட்டம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com