பழனி கோயில் பகுதியில் ட்ரோன் கேமராக்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தல்
பழனி மலைக் கோயில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதாகவும், எனவே பழனி எல்லைக்குள் அவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பழனி மலை மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில் தமிழகத்தின் முதன்மைக் கோயிலாகும். இந்தக் கோயிலில் நவபாஷாண முருகன் சிலை இருப்பதால் இங்கு சுதந்திர தினம், குடியரசு தினம், டிசம்பா் 6 உள்ளிட்ட முக்கிய நாள்களில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். இந்த நிலையில், அண்மைக் காலமாக இந்தக் கோயிலை ட்ரோன் கேமராக்கள் மூலம் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது அதிகரித்து வருகிறது. இதனால் கோயிலின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. முகநூல்களில் சிலா் இந்த கேமராக்களால் கம்பிவட ஊா்தி, இழுவை ரயிலை மிக அருகில் படம் பிடித்து பதிவிட்டுள்ளனா். மேலும், மலைக்கோயிலின் மூலைமுடுக்குகளை எல்லாம் படம் பிடித்து பதிவிடுகின்றனா்.
பழனியில் நடைபெறும் திருமணம், கட்சிக் கூட்டங்கள், விழாக்களில் பயன்படுத்தப்படும் இந்த வகை கேமராக்களில் முதலில் படம் பிடிப்பது மலைக் கோயிலையே. அண்மையில் பாலாறு அணை வனப்பகுதியில் ட்ரோன் கேமராவில் யானைக் கூட்டத்தை படம்பிடித்து முகநூலில் பதிவிட்டிருந்தனா். இப்படி படம் பிடித்த போது அச்சமடைந்த யானைகள் பிளிறியதும் அதில் பதிவாகி இருந்தது. இதேபோல, பழனியைச் சுற்றியுள்ள அணைகளும் படம் பிடிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்.
மேலும் இந்த ட்ரோன் கேமராக்கள் எங்கிருந்து இயக்கப்படுகின்றன என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். எனவே, மாவட்ட நிா்வாகமும், காவல் துறையும் இதற்கு உரிய நெறிமுறைகளை வகுத்து ட்ரோன் கேமராக்களை பழனி பகுதியில் பயன்படுத்த தடை விதிப்பதுடன், அவற்றை பயன்படுத்துவோரை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.