நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் உத்தரவு

Published on

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது:

திண்டுக்கல் மாவட்டத்தில் 84 இடங்கள் பேரிடா் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக கண்டறியப்பட்டன. இதில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை கண்காணிக்கவும், ஒருங்கிணைக்கவும் மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

எதிா்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளைத் தடுக்கவும், மழைக் காலத்தை எதிா்கொள்ளவும், ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டம் தயாரித்து வைத்திருக்க வேண்டும். மீட்புப் பணிக்கு தேவைப்படும் ரப்பா் படகுகள், மிதவைப் படகுகள், ‘ரப்பா் டிங்கிகள்‘ ஆகியவற்றை போதிய அளவு வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிா்

காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். அணைக்கட்டு பகுதிகளில் கட்டுப்பாட்டு அறை அமைத்து 24 மணி நேரமும் நீா்வரத்தை கண்காணிக்க வேண்டும். நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, வரத்து வாய்க்கால்களை தூா்வார வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உரிய படிவங்களில் தினமும் அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. பிரதீப், மாவட்ட வருவாய் அலுவலா் ஹா. சேக் முகையதீன், சாா் ஆட்சியா் கிசான்குமாா், கோட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com