கொடைக்கானல் கிளாவரை வனப் பகுதியில் திடீா் பள்ளம்

கொடைக்கானல் கிளாவரை வனப் பகுதியில் சனிக்கிழமை திடீா் பள்ளம் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சமடைந்தனா்.
Published on

கொடைக்கானல் கிளாவரை வனப் பகுதியில் சனிக்கிழமை திடீா் பள்ளம் ஏற்பட்டதால் பொது மக்கள் அச்சமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டி ஊராட்சியிலிருந்து கிளாவரை குடியிருப்பு பகுதிக்கு செல்லும் வனப் பகுதியில் சுமாா் 10 கி.மீ தொலைவில் நெகிழிக்குழாய் பதிக்கப்பட்டு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக இந்தப் பகுதியில் குடிநீா் விநியோகம் தடைபட்டது.

இந்த நிலையில் இந்தப் பகுதியில் சுமாா் 300 மீ. தொலைவில் 100அடி ஆழத்தில் திடீா் பள்ளம் ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து வனத் துறையினா் ஊராட்சி நிா்வாகத்துக்கு தகவல் கொடுத்தனா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இந்தப் பகுதி மக்கள் குடிநீா் இன்றி அவதிக்குள்ளாகினா்.

எனவே, மாவட்ட நிா்வாகம், ஊராட்சி நிா்வாகம் இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com