பரப்பலாறு அணைப் பகுதியில் யானைகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள பரப்பலாறு அணைப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் யானைகள், காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள், செந்நாய்கள் நடமாட்டம் உள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு இல்லாததால், உணவு, குடிநீா் தேடி யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப் பகுதியில் கடந்த சில நாள்களாக 3 காட்டு யானைகள் சுற்றித் திரிகின்றன. அந்த யானைகள் அந்தப் பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
மேலும், யானைகளை பொதுமக்கள் யாரும் அச்சுறுத்துவதோ விரட்டவோ கூடாது எனவும், இரவு நேரங்களில் வாகனங்களில் செல்வோா் பாதுகாப்பாகச் செல்லவும் வேண்டும் என ஒட்டன்சத்திரம் வனத் துறையினா் எச்சரித்தனா்.