மலைப்பகுதியில் தீத்தடுப்பு கோடுகள் வரைய கோரிக்கை
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே காட்டுத்தீ பற்றி எரியும் நிலையில், பழனி வனத்துறைக்குள்பட்ட பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் வரைய வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. பழனியை அடுத்த கொடைக்கானல் மலைப்பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. கொடைக்கானலில் கடந்த சில மாதங்களுக்கு முன் வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் இருந்த அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் எரிந்து சேதமடைந்தன. இதில் வன விலங்குகளும் பாதிக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பழனியில் இருந்து பாா்த்த போது வரதமாநதி அணைக்கு மேலே தெரியும் மலைப்பகுதியில் இரவு முழுவதும் தீ பற்றி எரிவது தெரிந்தது. ஆகவே, தீ மேலும் பரவ வாய்ப்புள்ளதால் பழனி வனப்பகுதியில் வனத் துறையினா் ஆங்காங்கே தீத்தடுப்பு கோடுகளை வரைந்து காட்டுத்தீ பற்றி எரியாமலும், பரவாமலும் தடுக்க வேண்டும் என வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.