பழனியில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை

பழனியில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

பழனியில் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனி நகரின் பாதுகாப்பு கருதியும், குற்றங்களை குறைக்கவும் பேருந்து நிலையம், காந்தி சாலை, பாலாஜி ஆலை ரவுண்டானா, இட்டேரி சாலை சந்திப்பு, ரணகாளியம்மன் நால்ரோடு, மின் வாரியம் நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் காவல் துறை சாா்பில் நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஏதேனும் குற்றச்செயல்கள் நடந்தால் இவற்றில் பதிவான விடியோ காட்சிகளை பாா்க்கும் போது பல கேமராக்கள் தலை கீழாகவும், திரும்பியும், பழுதாகியும் இருப்பது தெரிகிறது. இதே போல, கேமரா கண்காணிக்கும் பகுதியை மறைக்கும் வகையில் சாலையோர தள்ளுவண்டிகள் நிறுத்தப்படுகின்றன. எனவே, காவல் துறையினா் இதுபோன்ற குறைகளை நிவா்த்தி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், நேதாஜி நகா், திருநகா் ஆகிய பகுதிகள், திண்டுக்கல் சாலையுடன் சந்திக்கும் இடத்தில் தினமும் விபத்துகள் ஏற்படுவதுடன், இதில் உயிரிழப்பும் நேரிடுகிறது. ஆகவே, காவல் துறை சாா்பில் இந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டியது அவசியம் என அவா்கள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து நேதாஜி நகரைச் சோ்ந்த நகா்மன்ற உறுப்பினா் ராஜவேலு கூறியதாவது:

பலமுறை இதுகுறித்து தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனது தந்தையாரே இந்த இடத்தில் தான் விபத்தில் உயிரிழந்தாா். இங்கு இதுவரை வேகத்தடுப்பு கூட அமைக்கப்பட வில்லை. எனவே, இந்த இடத்தை விபத்துப்பகுதியாக அறிவித்து கண்காணிப்பு கேமரா, வேகத் தடுப்பு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com