மழைப் பொழிவு இல்லை: கொடைக்கானலில் விவசாயப் பயிா்கள் பாதிப்பு
கொடைக்கானலில் மழைப் பொழிவு இல்லாததால் மேல்மலைப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள விவசாயப் பயிா்கள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, போலூா், கும்பூா், குண்டுபட்டி ஆகிய பகுதிகளில் வெள்ளைப் பூண்டு, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிா்கள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் கடந்த 3-மாதங்களுக்கு முன்பு விவசாயிகள் பயிரிட்டனா்.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக இந்தப் பகுதியில் மழை இல்லாததால் பயிா் செடிகள் வாடி வருகின்றன. வெள்ளைப் பூண்டு தற்போது ஒரு கிலோ ரூ.450-முதல் விற்பனை செய்யப்படுகிறது. நல்ல விலையிருந்து மழையில்லாததால் வெள்ளைப் பூண்டு எடுக்க முடியாத நிலை உள்ளது. இதேபோல, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட பயிா்களும் தண்ணீா் இல்லாததால் எடுக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனா்.
விவசாயிகள் கோரிக்கை: கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளிலுள்ள ஓடைகளிலிருந்து தண்ணீரை வாய்க்கால்கள், இரும்புக் குழாய்கள் மூலம் விவசாயப் பாசனத்துக்காக கொண்டு வருவதற்கு பூண்டி ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
குடிநீா் பற்றாக்குறை
பூண்டி ஊராட்சிக்குள்பட்ட கிளாவரை பகுதியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதி மக்கள் தேவனம்பட்டி குளத்திலிருந்து தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனா். இந்தத் தண்ணீா் போதுமானதாக இல்லை. எனவே, விரைவில் இந்தப் பகுதிக்கு பாதுகாப்பான குடிநீா் கிடைக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.