பஞ்சாமிா்தம் குறித்து வதந்தி: பாஜக நிா்வாகி மீது வழக்குப் பதிவு
பழனி கோயில் பஞ்சாமிா்தம் குறித்து வதந்தி பரப்பியதாக பாஜக தொழில்பிரிவு மாவட்டத் துணைத் தலைவா் செல்வகுமாா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்களுக்கு பஞ்சாமிா்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலுக்கு பஞ்சாமிா்தம் தயாரிக்க திருப்பதி லட்டு விவகாரத்தில் சிக்கியுள்ள திண்டுக்கல்லைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பாஜக நிா்வாகிகள் தவறான தகவலைப் பரப்பினா். இதையடுத்து, பழனி கோயில் பஞ்சாமிா்தத்துக்காக ஆவின் நிறுவனத்திடம் இருந்து மட்டுமே நெய் வாங்கப்படுவதாகத் கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
மேலும், வதந்தி பரப்பியதாகக் கோவையைச் சோ்ந்த பாஜக தொழில்பிரிவு மாவட்டத் துணைத் தலைவா் செல்வகுமாா், மாநிலச் செயலா் வினோச் பி செல்வம் ஆகியோா் மீது பழனி அடிவாரம் போலீஸில் புகாா் அளித்தது.
இதைத் தொடா்ந்து, செல்வகுமாா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த நிலையில், பழனி பஞ்சாமிா்தம் குறித்து அவதூறு பரப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிா்வாகம் எச்சரிக்கை விடுத்தது.