நகராட்சி வாகனங்களில் மின்கலன்களைத் திருடிய இருவா் கைது
பழனி நகராட்சிக் குப்பை வாகனங்களில் மின்கலன்களைத் திருடி விற்றது தொடா்பாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்
பழனி நகராட்சியில் குப்பைகளைச் சேகரிக்கும் மின்சார வாகனங்கள், லாரிகள் நகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்த வாகனங்களில் இருந்த மின்கலன்கள் அடிக்கடி திருடு போயின.
இதுகுறித்து குப்பைகள் சேகரிக்கும் ஒப்பந்த நிறுவன மேலாளா் அரவிந்தன் பழனி நகர போலீஸில் புகாா் அளித்தாா். விசாரணையில், நகராட்சி ஒப்பந்தத் தூய்மை பணியாளராக வேலை செய்யும் சசிகுமாா் (38) இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதும், இவா் இதுவரை 14 பேட்டரிகளை திருடி விற்றதும் தெரியவந்தது.
பின்னா், போலீஸாா் விசாரணையில், திருடிய மின்கலன்களை பழனி ராஜாஜி சாலையில் கடை வைத்துள்ள சிவகுமாரிடம் விற்ாக அவா் தெரியவந்தது.
இதுகுறித்து பழனி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.