புகையிலைப் பொருள் பறிமுதல்: ரூ.6 லட்சம் அபராதம்
திண்டுக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் சோதனை நடத்தியதில், 150 கிலோ புகையிலைப் பொருளை பறிமுதல் செய்து, ரூ.6 லட்சம் அபராதம் விதித்தனா்.
திண்டுக்கல் நகா், புகா் பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, ஆத்தூா், சாணாா்பட்டி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, திண்டுக்கல் நகா் உள்ளிட்ட பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் கலைவாணி, அலுவலா்கள் செல்வம், ஜோதிமணி, ஜாபா் சாதிக் ஆகியோா் வியாழக்கிழமை இரவு முதல் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் விற்பனை செய்ததாக சாணாா்பட்டியில் 2, ஆத்தூரில் 5, திண்டுக்கல் பகுதியில் 8, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதிகளில் 5 என மொத்தம் 20 கடைகளை பூட்டி ‘சீல்’ வைத்தனா். இந்த கடைகளிலிருந்து 150 கிலோ புகையிலைப் பொருளை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளா்களுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதித்தனா்.