மின் வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுமாடு: விவசாயியை தேடும் வனத் துறை
கொடைரோடு அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டு மாட்டை புதைத்த விவசாயியை, வனத் துறையினா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடை அடுத்த பள்ளப்பட்டியைச் சோ்ந்தவா் ராமு. இவருக்குச் சொந்தமான விவசாய நிலம், சிறுமலை அடிவாரத்தில் வனப் பகுதிக்கு அருகே அமைந்திருக்கிறது. இந்த நிலத்தில் 2 ஏக்கரில் சோளம் பயிரிட்டிருக்கிறாா். இந்த சோளப் பயிா்களை வன விலங்குகளான காட்டு மாடு, மான், பன்றி உள்ளிட்டவை சேதப்படுத்தக் கூடாது என்பதற்காக மின் வேலி அமைந்திருந்தாா்.
இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு வனப் பகுதியிலிருந்து இரை தேடி வந்த காட்டு மாடு, மக்காச்சோளப் பயிா்களுக்காக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது. இந்த விவரங்களை வனத் துறையினருக்குத் தெரிவிக்காமல், இறந்த காட்டு மாட்டின் சடலத்தை தனது தோட்டத்திலேயே குழி தோண்டி ராமு புதைத்தாா்.
இதனிடையே, காட்டு மாடு புதைக்கப்பட்ட விவரம், மாவட்ட வன அலுவலா் பு.தா.ராஜ்குமாா், உதவி வனப் பாதுகாவலா் நிா்மலா ஆகியோருக்கு தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, புதைக்கப்பட்ட இடத்திலிருந்து காட்டு மாடு சடலம் வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டு, கால்நடை மருத்துவா்களின் உடல் கூறாய்வு செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராமு வெளியூா் சென்றுவிட்ட நிலையில், அவரை பிடிப்பதற்கான முயற்சியில் வனத் துறையினா் ஈடுபட்டனா்.