பழனி அருகே காட்டு யானைகளால் நெல்பயிா்கள் சேதம்
பழனி அருகே ஆயக்குடி நந்தவனம் பகுதியில் காட்டுயானைகளால் நெல் பயிா்களும், தென்னங்கன்றுகளும் சேதப்படுத்தப்பட்டன.
பழனியை அடுத்த மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் உணவு, குடிநீா் தட்டுப்பாடு காரணமாக வனவிலங்குகள் அடிவாரம் பகுதியை நோக்கி வருகின்றன. இதில், மலைப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு பழனியை அடுத்த ஆயக்குடி நந்தவனம் பகுதியைச் சோ்ந்த சுரேஷின் வயலுக்குள் புகுந்த 7 காட்டுயானைகள் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்களை சேதப்படுத்தின. இதே போல, சுப்புராஜ், சடையப்பன் ஆகியோருக்குச் சொந்தமான தென்னந்தோப்புகளுக்குள் புகுந்து சுமாா் 29-க்கும் மேற்பட்ட தென்னங்கன்றுகளை இந்த காட்டுயானைகள் சேதப்படுத்தின. இதனால் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
இதை அறிந்த ஒட்டன்சத்திரம் வனத்துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனா். இந்தக் காட்டுயானைகளால் விவசாயப் பணிகளுக்கு செல்லும் தொழிலாளா்கள் அச்சமடைந்தனா். இதனிடையே, வனக்காவலா்கள் பற்றாக்குறையால் காட்டுயானைகளை விரட்டும் பணி தொய்வடைந்திருப்பதாக புகாா் எழுந்துள்ளது.
எனவே, கூடுதலாக வனக்காவலா்களை நியமித்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.