முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்: முதலிடம் பிடித்த 708 வீரா், வீராங்கனைகள்
முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடித்த 708 வீரா், வீராங்கனைகளுக்கு ரூ.51.24 லட்சத்துக்கான பரிசுத் தொகையை ஆட்சியா் மொ.நா.பூங்கொடி சனிக்கிழமை வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்தன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் இருபாலருக்கும் தனித் தனியே போட்டிகள் நடைபெற்றன. தடகளம், நீச்சல், கபடி, கால்பந்து உள்ளிட்ட 42 வகையான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 21,602 வீரா், வீராங்கனைகள் பதிவு செய்தனா்.
இவா்களில் 11,606 போ் போட்டிகளில் பங்கேற்றனா். ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடித்த 708 வீரா், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் முன்னிலை வகித்தாா். மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வீரா், வீராங்கனைகளுக்கும், குழுப் போட்டிகளில் முதலிடம் பிடித்தவா்களுக்கும் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களை மாவட்ட ஆட்சியா் பூங்கொடி வழங்கினாா்.
திண்டுக்கல் மாவட்டத்தின் சாா்பில் மாநிலப் போட்டிக்குச் செல்லும் 708 வீரா், வீராங்கனைகளும் விளையாட்டுச் சீருடைகளுடன் அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுகின்றனா். மாநில அளவிலான போட்டிகள் அக். 4 முதல் 24-ஆம் தேதி வரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய மையங்களில் நடைபெறுகின்றன.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேயா் இளமதி, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆா்.சிவா, ஹாக்கி திண்டுக்கல் அமைப்பின் தலைவா் என்.எம்.பி.காஜாமைதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.