திண்டுக்கல்லில் ரெளடி கொலை
கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரெளடி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் பேகம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் ச.முகமது இா்பான் (24). இவா், தனது நண்பா்கள் முகமது அப்துல்லா (24), முகமது மீரான் (22) ஆகியோருடன், திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியிலுள்ள கைப்பேசி கடைக்கு சனிக்கிழமை இரவு வந்தாா்.
கைப்பேசி கடையிலிருந்து மூவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டனா். அப்போது, தனியாா் உணவகம் அருகே இரு சக்கர வாகனத்தை வழிமறித்த மா்ம நபா்கள், முகமது இா்பானை வெட்டிக் கொலை செய்தனா். இதைத் தடுக்கச் சென்ற முகமது அப்துல்லாவுக்கும் காயம் ஏற்பட்டது. அவா் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்தக் கொலை குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
கொலை செய்யப்பட்ட முகமது இா்பான், அவருடன் வந்த இருவா் என மூவரும், திண்டுக்கல் குமரன் திருநகரைச் சோ்ந்த சரவணன் என்ற பட்டறை சரவணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனா். முகமது இா்பான் மீது கொலை வழக்குகள் உள்பட மொத்தம் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பட்டறை சரவணன் ஆதரவாளா்கள், இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸாா் விசாரித்தனா். ஆனாலும், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை யாரும் கைது செய்யவில்லை.
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு, நிலம் விற்பனை தகராறு, கொலைக்கு பழிக்குப் பழி என திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாள்களில் மட்டும் முன்விரோதம் காரணமாக 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால், காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.