திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் உள்ளாட்சிகள் எல்லை விரிவாக்கம்!
திண்டுக்கல் மாநகராட்சி, பழனி நகராட்சி, கொடைக்கானல் நகராட்சிகளின் எல்லை விரிவாக்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட 13 ஊராட்சிகளை இணைப்பதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் இணைக்க பரிந்துரைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியலை இறுதி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இதன்படி, இணைக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் மக்கள்தொகை, பரப்பளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நகா்ப்புற உள்ளாட்சித் துறைக்கு அந்தந்த மாவட்ட நிா்வாகங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அந்த வகையில், திண்டுக்கல் மாநகராட்சி, பழனி நகராட்சி, கொடைக்கானல் நகராட்சிகளின் எல்லைகளும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன.
திண்டுக்கல் மாநகராட்சி: திண்டுக்கல் மாநகராட்சியுடன், 10 ஊராட்சிகளை இணைப்பதற்கு கடந்த 10 ஆண்டுகளாக பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, செட்டிநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, பள்ளப்பட்டி, பொன்மாந்துறை, பிள்ளையாா்நத்தம், அடியனூத்து, தோட்டனூத்து, முள்ளிப்பாடி ஆகிய ஊராட்சிகளை இணைக்கவும், இதன் மூலம் 14 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள மாநகராட்சி, 127 சதுர கி.மீ. ஆக அதிகரிக்கும். இதேபோல, மக்கள்தொகையும் 2 லட்சத்திலிருந்து 3.50 லட்சமாக உயரும் என்ற அடிப்படையில் பட்டியல் உருவாக்கப்பட்டது.
பழனி நகராட்சி: பழனி நகராட்சியுடன், சிவகிரிப்பட்டி, கோதைமங்கலம் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளன. சிவகிரிப்பட்டியில் 12.64 சதுர கி.மீ., கோதைமங்கலத்தில் 43.21 சதுர கி.மீ. என மொத்தம் 55.85 சதுர கி.மீ. நிலப்பரப்பு பழனி நகராட்சியுடன் இணைக்கப்படும். இந்த இரு கிராமங்களில் மக்கள்தொகை 25,800. தற்போது, 6 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள பழனி நகராட்சி, எல்லை விரிவாக்கத்துக்கு பின் 62.48 சதுர கி.மீ. ஆகவும், மக்கள்தொகை 70 ஆயிரத்திலிருந்து 96 ஆயிரமாகவும் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கொடைக்கானல் நகராட்சி: கொடைக்கானல் நகராட்சியுடன், ஆசியாவிலேயே 2-ஆவது பெரிய ஊராட்சியாக கருதப்படும் வில்பட்டி ஊராட்சியை இணைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. 333 சதுர.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள வில்பட்டி ஊராட்சியின் மக்கள்தொகை 15,800. இந்த ஊராட்சி இணைப்புக்கு பின் 21.45 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ள கொடைக்கானல் நகராட்சியின் பரப்பளவு 354 சதுர கி.மீ. ஆக அதிகரிக்கும்.
துரிதமாக நடைபெறும் விரிவாக்கப் பணிகள்: இதுதொடா்பாக, நகராட்சிகள், குடிநீா் வழங்கல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மாநகராட்சியுடன் இணைக்கப்படும் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், அதேபோல, நகராட்சியுடன் இணைக்கப்படும் பேரூராட்சிகள், ஊராட்சிகள், பேரூராட்சியுடன் இணைக்கப்படும் ஊராட்சிகள் குறித்த முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் டிசம்பா் மாதத்தோடு முடிவடையும் நிலையில், நகா்ப்புற உள்ளாட்சிகளின் எல்லை விரிவாக்கத்தை துரிதமாக மேற்கொள்வதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தாா்.