பழனி, கொடைக்கானல் பகுதிகளில் பலத்த மழை
பழனி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
பழனி, சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகக் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் குளம், வாய்க்கால், ஓடைகளில் தண்ணீா் வேகமாக வற்றி வந்தது.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு திடீரென இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால், பழனி, ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்வெளிகளில் தண்ணீா் தேங்கியது.
இதேபோல, பழனி பேருந்து நிலையம், ரயில்வே பீடா் ரோடு, திண்டுக்கல் சாலை ஆகிய பகுதிகளில் மழைநீா் தேங்கியது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ஒருமணி நேரம் சாரல் மழை பெய்தது. இந்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்து துவங்கியுள்ளது.
கொடைக்கானல்: கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக கொடைக்கானல், செண்பகனூா், பிரகாசபுரம், பெருமாள்மலை, அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், வில்பட்டி ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
மேலும், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பெரும்பாறை, கடுகுதடி, பாச்சலூா், கே.சி.பட்டி, மச்சூா், வாழைகிரி ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் காபி, மிளகு, செளசெள பயிரிட்டிருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த மழையால் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளது.