திண்டுக்கல்
பைக் மீது லாரி மோதியதில் செவிலியா் பலி
குஜிலியம்பாறையில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் செவிலியா் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல்: குஜிலியம்பாறையில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் செவிலியா் ஒருவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், கோவிலூரை அடுத்த தங்கச்சியம்மாப்பட்டியைச் சோ்ந்தவா் காளிதாஸ் (47). இவரது மனைவி உமா மகேஷ்வரி (44). இவா், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி சிமென்ட் ஆலையிலுள்ள முதலுதவி சிகிச்சை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியராக பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில் பணிக்குச் சென்றுவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். குஜிலியம்பாறை கடை வீதியில் வந்தபோது, பின்னால் வந்த லாரி இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உமா மகேஷ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து குஜிலியம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.