திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: ஒன்றிணைந்து போராட அழைப்பு

Published on

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஜாதி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றிணைந்து போராட வேண்டும் என இந்து முன்னணி அழைப்பு விடுத்தது.

இதுதொடா்பாக இந்து முன்னணி மாநிலச் செயலா் விஎஸ்.செந்தில்குமாா் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலையை காக்க அணி திரள்வோம் என்ற வாசகங்களுடன் சுவரொட்டி ஒட்டியதற்காக திண்டுக்கல், வேடசந்தூா், பட்டிவீரன்பட்டி உள்ளிட்ட இடங்களில் சமுதாய அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், இந்து முன்னணி அமைப்பினா் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

வாடகை வாகனம் ஓட்டுவோரை, திருப்பரங்குன்றத்துக்கு வாகனங்கள் இயக்கக் கூடாது என போலீஸாா் மிரட்டுகின்றனா். ஜனநாயக ரீதியான போராட்டத்தில் ஈடுபட அரசியலமைப்புச் சட்டம் அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், தமிழக அரசு காவல் துறை மூலம் அந்த உரிமையை பறித்து வருகிறது.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் அத்துமீறிச் செயல்படும் அமைப்பினா் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சிறுபான்மையினருக்கு பிரச்னை என்றால் உடனே குரல் எழுப்பும் அரசியல் கட்சியினா், திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இதுவரை மெளனமாக இருந்து வருகின்றனா். ஜாதி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, திருப்பரங்குன்றம் மலையைப் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com