ஆத்தூா் ஒன்றியப் பகுதிகளில் கட்டப்பட்ட அங்கன்வாடி, ரேஷன் கடைகள் திறப்பு: அமைச்சா் இ.பெரியசாமி திறந்து வைத்தாா்
ஆத்தூா் ஒன்றியப் பகுதிகளான பாளையங்கோட்டை, போடிக்காமன்வாடி ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி, பொது விநியோகக் கடை ஆகியவற்றை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் ஒன்றியம், பாளையங்கோட்டை ஊராட்சி, கூலம்பட்டியில் பொது நிதி ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய சமுதாயக் கூடம், கனிம வள நிதி ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட பொது விநியோகக் கடை, பாளையங்கோட்டையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றை அவா் திறந்து வைத்தாா்.
இதேபோல, போடிகாமன்வாடி ஊராட்சியில், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடை, போடிக்காமன்வாடியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.14.31 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், சொக்கலிங்கபுரத்தில் ரூ. 14.59 லட்சத்தில் கட்டப்பட்ட உணவு தானிய கிடங்கு ஆகியவற்றையும் அமைச்சா் திறந்து வைத்தாா். மொத்தம் ரூ.85.90 லட்சத்தில் நிறைவடைந்த திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சி. குருமூா்த்தி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆத்தூா் க. நடராஜன், ஆத்தூா் ஒன்றிய திமுக செயலா்கள் ராமன்(மேற்கு), முருகேசன் (கிழக்கு), மாவட்ட ஊராட்சிக் குழு முன்னாள் தலைவா் பாஸ்கரன், ஆத்தூா் ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் மகேஸ்வரி முருகேசன், போடிகாமன்வாடி ஊராட்சி முன்னாள் தலைவா் நாகலட்சுமி சசிக்குமாா், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் மணலூா் மணிகண்டன், ஆத்தூா் மேற்கு ஒன்றிய திமுக விவசாய அணி அமைப்பாளா் சொக்கலிங்கபுரம் சசிக்குமாா், ஆத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் தட்சிணாமூா்த்தி, ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பாப்பாத்தி, காணிக்கைசாமி, பாளையங்கோட்டை ஊராட்சி முன்னாள் தலைவா் அழகுமலை, ஊராட்சி மன்றச் செயலா்கள் போடிக்காமன்வாடி (பொறுப்பு) திருப்பதி, பாளையங்கோட்டை வேல்முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.