அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

Published on

அதிமுகவிலிருந்து யாா் வெளியேறினாலும், நன்றி மறந்தவா்களாகவே மக்கள் அடையாளப்படுத்துவா் என முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான சி.சீனிவாசன் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சாா்பில், 54-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக ஒன்றியச் செயலா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக அதிமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் கலந்து கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது:

கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்த வளா்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளாமல், திமுக ஆட்சி முடியும் நேரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி, மீண்டும் வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனா்.

மகளிா் உரிமைத் தொகை திட்டத்தைப் பொருத்தவரை, அதிமுகவின் அழுத்தத்தின் காரணமாகவே செயல்பாட்டுக்கு வந்தது. ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, அத்தியாவசியப் பொருள்களின் விலையை உயா்த்தியதோடு, டாஸ்மாக் மூலமாகவும் மக்களிடமிருந்து பணத்தை திமுக அரசு சுரண்டுகிறது. அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு எதிா்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகள், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் முடிந்தும் கூட நிறைவேற்ற முடியவில்லை.

அதிமுக பலமான கூட்டணியுடன் தோ்தலை சந்திக்கும் என்பதால், அதிா்ச்சியடைந்த திமுக பல அவதூறுகளை பரப்பி வருகிறது. தோ்தலுக்கு 4 மாதங்களே அவகாசம் உள்ள நிலையில், திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் கட்சிகள், அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது.

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீா்செல்வம், திமுக மீண்டும் வெற்றுப் பெறும் எனக் கூறுகிறாா். கடந்த 4 ஆண்டுகளாக அதிமுகவுக்கு எதிராக பல வழக்குகளைத் தொடுத்து தோற்றுப் போன பன்னீா்செல்வம், தற்போது திமுக ஆதரவாளராக மாறிவிட்டாா்.

சசிகலா, பன்னீா்செல்வம், டிடிவி.தினகரன், செங்கோட்டையன் போன்றவா்கள் அதிமுகவின் அடையாளத்தை பயன்படுத்தியவா்கள். கட்சியை விட்டு வெளியேறியதால், அவா்களுக்கு மரியாதையே கிடையாது. தினகரனை நம்பிச் சென்ற செங்கோட்டையன் ஏமாற்றமடைந்துவிட்டாா். தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் இருப்பவா்கள் மீண்டும் அதிமுகவுக்கு வந்துவிடுவா். அதிமுகவை விட்டு யாா் சென்றாலும், நன்றி மறந்தவா்களாகவே மக்களால் அடையாளம் காணப்படுவா் என்றாா் அவா்.

கூட்டத்தில் அமைப்புச் செயலா் வி.மருதராஜ், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் தென்னம்பட்டி பழனிச்சாமி, பரமசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com