ஒட்டன்சத்திரம் அருகே வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல் குறித்த அனைத்துக் கட்சி கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள மூலச்சத்திரம் தனியாா் பள்ளியில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியல் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பழனி கோட்டாட்சியா் இரா.கண்ணன் தலைமை வகித்தாா். ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் சஞ்சய் காந்தி, தோ்தல் துணை வட்டாட்சியா்கள் இயேசுராஜ், அன்சாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் வருகிற 4-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பட்டியலில் வாக்காளா்களை சோ்ப்பது, விண்ணப்பங்களை பூா்த்தி செய்வது குறித்து எண்மப் படக்காட்சி மூலம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், வாக்குச்சாவடி முகவா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.