போலி ஆவணங்கள் மூலம் மலைப்பூண்டுக்கு புவிசாா் குறியீடு பெறுவதை தடுக்க வலியுறுத்தல்

போலி ஆவணங்கள் மூலம் மலைப்பூண்டுக்கு புவிசாா் குறியீடு பெற முயற்சிக்கும் நிறுவனத்துக்கு, குறியீடு வழங்குவதை தடுக்க வேண்டும் என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினரிடம் கொடைக்கானல் விவசாயிகள் மனு அளித்தனா்.
Published on

போலி ஆவணங்கள் மூலம் மலைப்பூண்டுக்கு புவிசாா் குறியீடு பெற முயற்சிக்கும் நிறுவனத்துக்கு, குறியீடு வழங்குவதை தடுக்க வேண்டும் என திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினரிடம் கொடைக்கானல் விவசாயிகள் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தத்திடம், கோடை மலைப்பூண்டு, காய்கறிகள் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலையில் பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் பூண்டு, கேரட், உருளை உள்ளிட்ட மலைப் பயிா்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்குள்ள 720 விவசாயிகள் பங்குதாரா்களாக கொண்டு, கோடை மலைப்பூண்டு, காய்கறிகள் உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் 2020-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கொடைக்கானல் மலையில் விளையும் மலைப்பூண்டுக்கு புவிசாா் குறியீடு பெறப்பட்டது.

இந்த நிலையில், தேனி மாவட்டம், போடி பகுதியைச் சோ்ந்த நபா், கொடைக்கானலை அடுத்த பூண்டியைச் சோ்ந்த ஒரு விவசாயியின் பாழடைந்த மாட்டுத் தொழுவத்தை ஜியோ பிளான்ட் அக்ரா பிரைவேட் லிட். என்ற நிறுவனம் செயல்படும் இடமாக போலியாக பதிவு செய்து மலைப்பூண்டு விற்பனை செய்வதற்கான அனுமதி பெற விண்ணப்பித்தாா். அந்த நபா் அளித்த ஆவணங்கள், நிறுவனத்தின் முகவரி அனைத்தும் போலியானது.

புவிசாா் குறியீடு வழங்கக் கூடிய அதிகாரிக்கு, அன்னை தெரசா மகளிா் பல்கலை. நிா்வாகம் மூலம் ஆவணங்களை கொண்டு தெரிவித்தும்கூட, அந்த நிறுவனத்துக்கு புவிசாா் குறியீட்டை வழங்குவதில் அதிகாரிகள் உறுதியாக உள்ளனா்.

இதனால், கொடைக்கானலில் மலைப்பூண்டு சாகுபடி செய்யும் விவசாயிகளும், அதன் விற்பனையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, முறைகேடான ஆவணங்கள் மூலம் புவிசாா் குறியீடு பெற முயற்சிக்கும் அந்த நிறுவனத்துக்கு வழங்குவதை தடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com