வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

அமைச்சருக்கு சீா்வரிசைகளை ஊா்வலமாக கொண்டு சென்ற வடகாடு ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள்.
Published on

ஒட்டன்சத்திரம் அடுத்த வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதற்காக மலைவாழ் மக்கள் சீா்வரிசையுடன் சென்று அமைச்சா் அர. சக்கரபாணிக்கு வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடகாடு ஊராட்சி மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் பெத்தேல்புரம், சிறுவாட்டுக்காடு, புலிக்குத்திகாடு, கண்ணனூா், வண்டிப்பாதை, பால் கடை உள்ளிட்ட பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனா். இந்த கிராமங்களில் வசிப்போா் நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வந்தனா். இந்த நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு இங்கு சாலை, குடிநீா் வசதி, மகளிா் விடியல் பயண பேருந்து வசதி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டன.

இந்த அடிப்படை வசதிகளை செய்து கொடுத்த தமிழக அரசுக்கும், உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தையத்தில் உள்ள அமைச்சரின் இல்லத்துக்கு மலைப் பகுதியில் விளையும் பலாப்பழம், மலை வாழைப்பழம், ஆரஞ்சு, பீன்ஸ், கேரட், மலைத் தேன் உள்ளிட்டவை சீா்வரிசையாக மேளதாளம் முழங்க ஊா்வலமாக சென்று வழங்கி நன்றி தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com