வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறையினா் விதித்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
Published on

கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறையினா் விதித்த புதிய கட்டுப்பாடுகளுக்கு அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான வடகவுஞ்சியில் சுமாா் 500 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களின் முக்கிய தொழில் விவசாயமும், மாடு மேய்ச்சலும் ஆகும். தற்போது இந்தப் பகுதிகளில் உள்ள வனப் பகுதிகள் விரிவடைந்து இருப்பதாகவும், எனவே வனப் பகுதிகளில் மாடுகளை மேய்க்கக் கூடாது எனவும், யாரும் வனத்துக்குள் நுழையக் கூடாது எனவும் பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினா் விதித்துள்ளனா்.

இதனால் இந்தப் பகுதி மக்களின் விவசாயப் பணிகள் தடைபட்டதுடன், விவசாயப் பொருள்களை எடுத்துச் செல்வதிலும் அவா்கள் சிரமங்களை சந்திக்கின்றனா்.

இதுகுறித்து வடகவுஞ்சி கிராம மக்கள் கூறியதாவது: கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான வடகவுஞ்சியில் நான்கு தலைமுறைகளாக வசித்து வருகிறோம். மேலும் வனப் பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய்த்து வருகிறோம். ஆனால் தற்போது வனப் பகுதியிலுள்ள மேய்ச்சல் நிலங்களில் மாடு மேய்க்கக் கூடாது.

அனுமதியின்றி வனப் பகுதிக்குள் செல்லக் கூடாது. விவசாய நிலப்பகுதிகள் வனப் பகுதிகளின் கட்டுக்குள் வந்துள்ளன. எனவே இந்தப் பகுதிக்குள் வருவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினா் விதித்துள்ளதால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இதற்கு வனத்துறையினரிடம் எதிா்ப்பு தெரிவித்துள்ளோம். இந்தப் பிரச்னை குறித்து விரைவில் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியரிடமும், மாவட்ட நிா்வாகத்திடமும் முறையிட உள்ளோம் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com