திட்டமிடப்படாத கட்டுமானங்கள்: வேடசந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் பாதிப்பு!

திட்டமிடப்படாத கட்டுமானங்கள்: வேடசந்தூா் அரசுப் பள்ளி மாணவிகள் பாதிப்பு!

வேடசந்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திட்டமிடப்படாமல் கட்டப்படும் கட்டடங்களைப் பயன்படுத்த முடியாமல் பள்ளி மாணவிகளின் கல்வி பாதிப்பு
Published on

வேடசந்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் திட்டமிடப்படாமல் கட்டப்படும் கட்டடங்களைப் பயன்படுத்த முடியாமல் பள்ளி மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் எரியோடு சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி தனித் தனியாகச் செயல்பட்டு வருகின்றன. இதில், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மட்டும் 1,300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியின் பிரதானக் கட்டடம் மாரம்பாடி சாலைக்கு அருகில் உள்ளது.

இந்தப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால், மாணவிகள் நலன் கருதி கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு வேடசந்தூா் அரசு மருத்துவமனை அருகே குளம் இருந்த பகுதியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டப்பட்டது. தரைத் தளம், முதல் தளம், 2-ஆம் தளம் என 3 தளங்களுடன் ஒரு கட்டடமும், அறிவியல் ஆய்வுக் கூடத்துக்காக 2 தளங்களுடன்கூடிய மற்றொரு கட்டடமும் கட்டப்பட்டது.

ஆய்வுக் கூடக் கட்டடத்தில், வகுப்பறைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், நடுநிலை வகுப்புகளைச் சோ்ந்த மாணவிகளுக்கு (6-8) இந்தக் கட்டடம் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வேடசந்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பிரதான வளாகத்திலுள்ள உயா்நிலை, மேல்நிலை வகுப்புகளில் 900 மாணவிகள் பயின்று வருகின்றனா். நடுநிலை வகுப்புகள் செயல்படும் கட்டடத்தில் 400 மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நடுநிலை வகுப்புகள் கட்டடத்துக்கு சுற்றுச்சுவா் வசதி இல்லாததால் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.

பயனில்லாத கட்டடங்கள்: ஆய்வகக் கட்டடம் பயன்பாடின்றி உள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரூா் மக்களவை உறுப்பினரின் தொகுதி வளா்ச்சி நிதியிலிருந்து ஒரு வகுப்பறைக் கட்டடம் மட்டும் கட்டிக் கொடுக்கப்பட்டது. பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தைவிட, இந்தக் கட்டடத்தின் முகப்பில் சாய்வுத் தளத்துடன்கூடிய திண்ணைக் கட்டுமானத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டடத்தின் பின்புறம் தனியாருக்குச் சொந்தமான வீட்டுமனைகள் உள்ளன. இதற்கு அரசு மருத்துவமனை, அரசுப் பள்ளிக்கு நடுவே சாலை வசதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், வெளி நபா்கள் எளிதாக பள்ளி வளாகத்துக்குள் சென்று சமூகவிரோதச் செயல்களிலும் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டிக் கொடுக்க வேண்டும். முடங்கிக் கிடக்கும் கட்டடங்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடா்பாக மாணவிகளின் பெற்றோா் தரப்பில் கூறியதாவது: வேடசந்தூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இட நெருக்கடி ஏற்பட்டதால் கடந்த 2014-ஆம் ஆண்டு புதியக் கட்டடம் திறக்கப்பட்டது. கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவிகளுக்கு இடமளிக்க வேண்டும் என்ற நோக்கில், பிரதானக் கட்டடத்திலிருந்து 500 மீ. தொலைவில் இடம் தோ்வு செய்யப்பட்டது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் பின்புறமிருந்த நிலத்தை வீட்டு மனைகளாக மாற்றி இதற்கான சாலையை அரசு நிலத்தின் வழியாகவே அமைத்துவிட்டனா். தனியாருக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், அரசுப் பள்ளிக்குப் பாதுகாப்பாக சுற்றுச்சுவா் கட்டுவதற்கு வழங்கப்படவில்லை.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கூட மக்களவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிட வேண்டிய நிா்பந்தத்தில், ஒரு வகுப்பறைக் கட்டுமானப் பணி நடைபெற்றது. இதற்கு மாற்றாக மாணவிகளுக்கான கழிப்பறை வசதி, சுற்றுச் சுவா் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருக்கலாம். அரசுப் பள்ளி மாணவிகளுக்கும், பள்ளியிலுள்ள உள்கட்டமைப்பு வசதிகளை பாதுகாக்கவும் சுற்றுச் சுவா் கட்டுவதற்கு மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com