போலி சான்றிதழில் மருத்துவச் சோ்க்கை: மாணவி, பெற்றோா் கைது

போலி சான்றிதழ் அளித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்த மாணவி, அவரது பெற்றோருடன் கைது செய்யப்பட்டாா்.
Published on

போலி சான்றிதழ் அளித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சோ்ந்த மாணவி, அவரது பெற்றோருடன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்த சொக்கநாதா் (55), திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் நில அளவையராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரின் மனைவி விஜய முருகேஸ்வரி (47). இவா்களது மகள் காருண்யா ஸ்ரீவா்ஷினி (19). 12-ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற இவா், உயா் கல்வியில் மருத்துவம் பயில விரும்பினாா். ஆனால், நிகழாண்டு நடைபெற்ற நீட் தோ்வில் 228 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றாா். இதனால், முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வில் காருண்யாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

இதனால், ஏமாற்றமடைந்த அவா், மருத்துவ இடத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கில் இணைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீட் தோ்வில் 456 மதிப்பெண்கள் பெற்ாக போலியான சான்றிதழை உருவாக்கினாா். இந்தச் சான்றிதழுடன் சென்ற காருண்யாவுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

இந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கப்பட்டன. தொடா்ந்து, மாணவா் சோ்க்கை விவரங்கள் குறித்து சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு நடைபெற்ற சான்றிதழ் சரிபாா்ப்புப் பணியின்போது, காருண்யா ஸ்ரீவா்ஷினி அளித்த நீட் தோ்ச்சி சான்றிதழ், கலந்தாய்வு இட ஒதுக்கீட்டுக்கான சான்றிதழ்கள் போலியானது எனக் கண்டறியப்பட்டது.

இந்த விவரங்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) வீரமணிக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு மாணவி காருண்யா ஸ்ரீவா்ஷினி, அவரது தந்தை சொக்கநாதா், தாய் விஜய முருகேஸ்வரி ஆகிய 3 பேரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com