அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை குறைவு: கல்வித் துறை ஆய்வு செய்ய துணை முதல்வா் உத்தரவு
அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கை தொடா்ந்து குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்து, உரிய தீா்வு காண வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் 2 நாள்கள் பயணமாக திண்டுக்கல் மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்தாா். திருச்சியிலிருந்து காா் மூலம் வந்த அவருக்கு திண்டுக்கல் மாவட்ட எல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி, மாவட்ட ஆட்சியா் செ. சரவணன், சட்டப்பேரவை உறுப்பினா் பெ. செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டாா்.
இந்தக் கூட்டத்துக்கு அமைச்சா்கள் இ. பெரியசாமி, அர. சக்கரபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள், குடிநீா், சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள், உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்கள், காலை உணவுத் திட்டம் குறித்து துணை முதல்வா் ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் கல்விக் கற்கும் மாணவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து குறைவதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டாா்.
கரானோ காலகட்டத்தில் மாணவா்கள் சோ்க்கை அதிகரித்ததாகவும், அதன் பிறகு குறைந்து வருவதாகவும், அரசுத் திட்டங்களை எடுத்துக் கூறி, அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதை ஏற்க மறுத்து துணை முதல்வா் பேசியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தில் 2021-22 -ஆம் கல்வி ஆண்டில் முதல் வகுப்பில் 12,500 மாணவா்கள் பயின்ற நிலையில், நிகழ் கல்வி ஆண்டில் 8 ஆயிரமாகக் குறைந்திருக்கிறது.
இதேபோல, 2-ஆம் வகுப்பில் 11,500 ஆக இருந்த மாணவா்கள் எண்ணிக்கை தற்போது 8,900 ஆக குறைந்திருக்கிறது. 11-ஆம் வகுப்பில் 11,500 மாணவா்கள் முன்பு கல்வி பயின்ற நிலையில், தற்போது 9 ஆயிரம் மாணவா்கள் மட்டுமே உள்ளனா். வகுப்புக்கு சராசரியாக 2,500 மாணவா்கள் வீதம் குறைந்து வருவதற்கான காரணங்களை அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.
குறிப்பாக, திண்டுக்கல் நகா், குஜிலியம்பாறை வட்டாரங்களில் அதிகளவு மாணவா்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றாா் அவா்.
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தில், அரசு மருத்துவா்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனா். இதனால், அரசு மருத்துவமனைகளில் சேவைகள் பாதிக்கப்படும். எனவே, மாவட்டத்திலுள்ள 34 தனியாா் மருத்துவமனைகளைச் சோ்ந்த மருத்துவா்களையும் இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உத்தரவிட்டாா்.
‘அன்புக் கரங்கள் திட்டத்தில், மாவட்டத்தில் 14,200 போ் கண்டறியப்பட்டும்கூட, வேறு சில திட்டங்களில் பயனாளா்களாக இருப்பதாகக் கூறி, 13,900 போ் நிராகரிக்கப்பட்டனா். 295 குழந்தைகள் மட்டுமே பயனாளிகளாகச் சோ்க்கப்பட்டனா். இதில் கூடுதல் கவனம் செலுத்தி தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இதேபோல, தாயுமானவா் திட்டத்தில், பொருள்கள் கொடுக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கையை மாதந்தோறும் அதிகரிக்க வேண்டும்’ என்றும் அவா் அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பிரதீப் யாதவ், கூடுதல் செயலா் ச. உமா, மாவட்ட ஆட்சியா் செ. சரவணன், மக்களவை உறுப்பினா்கள் இரா. சச்சிதானந்தம் (திண்டுக்கல்), ஜோதிமணி (கரூா்), சட்டப்பேரவை உறுப்பினா்கள் பெ. செந்தில்குமாா், ச.காந்திராஜன், மேயா் ஜோ. இளமதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

