இளைஞா் உயிரிழந்த விவகாரம்: மாமனாா் உள்பட இருவா் கைது
திண்டுக்கல் அருகே விபத்தில் இளைஞா் உயிரிழந்த சம்பவத்தில், அவரது மாமனாா் உள்ளிட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அருகேயுள்ள முள்ளிப்பாடி ஆரோக்கியசாமி நகா் பகுதியில், திருச்சியிலிருந்து திண்டுக்கல் நோக்கி செவ்வாய்க்கிழமை வந்த அரசுப் பேருந்து மோதிய விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள கண்டிச்சங்காடு பகுதியைச் சோ்ந்த கெளதம் (25) என்பவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில் உயிரிழந்த கெளதம், காா் ஓட்டுநா் என்பதும், மனைவி, ஒரு குழந்தையுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது. விபத்து நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்த போலீஸாா், கெளதமுடன் இருவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் விசாரித்தபோது, திண்டுக்கல் அடுத்த எரியோட்டிலிருந்த மனைவி செளபராணியை பாா்ப்பதற்காக வந்த கெளதம், மதுபோதையில் காரில் அழைத்து வந்த மாமனாா் சரவணன் (55), தாமரைப்பாடியைச் சோ்ந்த வேலுச்சாமி (53) ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். அப்போது சாலையின் நடுவே சென்ற கெளதம் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீஸாா், சரவணன், வேலுச்சாமி ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
