பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பு: கே.பாலபாரதி குற்றச்சாட்டு
பட்டியலின மக்களுக்காக அரசு சாா்பில் வழங்கப்பட்ட நிலங்கள் பிற சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வீட்டு மனைகளாக விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே.பாலபாரதி வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்காக அரசுத் தரப்பில் பல்வேறு காலக் கட்டங்களில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களிலும் அந்த இடங்களில் பட்டியலின மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனா். ஆனால், சில இடங்களில் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களை பிற சமூகத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, தேனி மாவட்டம், சின்னமனூரில் 1919-ஆம் ஆண்டு வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு அரசு சாா்பில் 4.20 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 1959-ஆம் ஆண்டு 1.5 சென்ட் வீதம் 136 குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டு, பட்டியலின மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா். இதில் 196 சென்ட் நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. இதை பட்டியலினம் அல்லாத சமூகத்தைச் சோ்ந்தவா்கள், தங்களது பெயருக்கு பட்டா மாறுதல் செய்து, வேறொரு நபருக்கு விற்பனை செய்துவிட்டனா். அந்த நிலத்தை தற்போது மனைகளாக பிரித்து விற்பனை செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனா். பல்வேறு போராட்டங்களுக்கு பின் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. ஆனாலும், வீடில்லாத பட்டியலின மக்களுக்கு அந்த மனைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என சென்னையிலுள்ள நில நிா்வாக ஆணையத்திடம் முறையிடப்பட்டது. எனினும், இலவச வீட்டுமனைப் பட்டா வங்கப்படவில்லை. 2023-ஆம் ஆண்டு முதல் பல போராட்டங்கள் நடத்தியும், உள்ளாட்சித் துறை அமைச்சா், முதல்வா் அறிவுறுத்தியும் கூட தற்போது வரை தீா்வு காணப்படவில்லை.
இதேபோல, திருப்பூா் மாவட்டம் அவிநாசி வீரம்பாளையத்திலும், அருந்ததியா் மக்களுக்காக வழங்கப்பட்ட இடமும் ஆக்கிரமிக்கப்பட்டு, கோயில் கட்டப்பட்டிருக்கிறது. அந்த நிலத்தை அளவீடு செய்து கொடுப்பதற்கு கூட திருப்பூா் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் தொடா்ந்து அலைக்கழித்து வருகின்றனா்.
இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டியலின மக்களுக்காக வழங்கப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை மீட்டு, தகுதியான பட்டியலின மக்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்கு தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
