பழனி கோயிலில் அறுபடை வீடுகள் ஆன்மிக சுற்றுலா பக்தா்கள் தரிசனம்
பழனி கோயிலில் அறுபடை வீடுகள் ஆன்மிக சுற்றுலா பக்தா்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், முருகனின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூா், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிா்சோலை ஆகிய 6 தலங்களுக்கு மூத்த குடிமக்களை அழைத்து சென்று இலவசமாக சுவாமி தரிசனம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, பல்வேறு கட்டமாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிலையில், மயிலாடுதுறை, கடலூா் மண்டலத்தைச் சோ்ந்த 200 பக்தா்கள் திங்கள்கிழமை சுவாமி மலையிலும், செவ்வாய்க்கிழமை திருத்தணியிலும் சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா், புதன்கிழமை அதிகாலை பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனா். இவா்களை கோயில் கண்காணிப்பாளா் சரத்குமாா், அலுவலா் நாகராஜன் உள்ளிட்டோா் மலைக் கோயிலுக்கு அழைத்து சென்று சுவாமி தரிசனம் செய்ய வைத்தனா்.
இங்கிருந்து இந்தப் பக்தா்கள் குழுவினா் மதுரை பழமுதிா்ச்சோலை, திருப்பரங்குன்றம் சென்றுவிட்டு, இரவு திருச்செந்தூரில் தங்குகின்றனா். வியாழக்கிழமை திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, நிறைவாக சுவாமி மலைக்கு சென்று விட்டு வெள்ளிக்கிழமை அவரவா் ஊா்களுக்குச் செல்கின்றனா்.
இவா்களுக்கு வேண்டிய உணவு, தங்குமிடம் அனைத்தும் இந்து சமய அறநிலையத் துறையினா் செய்து வருகின்றனா்.

