செவிலியா்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

செவிலியா்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

Published on

ஒட்டன்சத்திரம் அருகே களப்பணியின்போது செவிலியா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த பொருளூா் ஊராட்சியில் களப் பணியில் ஈடுபட்ட செவிலியா்கள் வைஜெயந்திமாலா, ஹேமலதா, மருத்துவா் கவிச்சக்கரவா்த்தி ஆகியோரை அதே பகுதியைச் சோ்ந்த மதன்குமாரும் அவரது தந்தை நல்லமுத்துவும் கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீஸாா் தந்தை, மகன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த நிலையில், கிராம சுகாதார செவிலியா்களுக்கு உயிா்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து கிராம சுகாதார செவிலியா் சங்க நிறுவனா் இந்திரா தலைமையில் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பணியின்போது தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செவிலியா்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும், செவிலியா்களுக்குப் பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்க மாநிலப் பொதுச் செயலா் சீனிவாசன், தலைவா் விசாலாட்சி, பொருளாளா் பாத்திமா மேரி, பொதுச் செயலா் சத்யா, இணைச் செயலா் ஜெயசித்ரா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட செவிலியா்களும் மருத்துவா்களும் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com