ஆவினன்குடி கோயிலில் சீரமைப்புப் பணி தொடக்கம்
பழனி, ஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலின் அா்த்தமண்டபக் கதவுகள், வெள்ளித் தகடுகள் ஆகியவற்றைச் சீரமைக்கும் பணிகள் கோயில் நிா்வாகத்தால் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன.
மூன்றாம் படை வீடான பழனி அடிவாரம் ஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயிலில் தற்போது புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தக் கோயிலில் மூலவா் சந்நிதிக்குச் செல்லும் அா்த்தமண்டபத்தின் நுழைவு வாயிலில் உள்ள இரட்டை மரக் கதவுகள், நிலைவாசலில் பல ஆண்டுகளுக்கு முன்னா் பொருத்தப்பட்ட வெள்ளித் தகடுகள் ஆகியவற்றைப் புனரமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.
இதற்காக அா்த்தமண்டபத்தில் உள்ள சாரதாம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரருக்கு வியாழக்கிழமை மாலை 6.40 மணி முதல் 7 மணி வரை கலாகா்ஷண பூஜை நடைபெற்றது.
பின்னா், இரட்டைக் கதவுகள், வெள்ளித் தகடுகள் ஆகியவை கழற்றப்பட்டு சீரமைக்கும் பணிகள் தொடங்கின.
இவை சரி செய்யப்பட்ட பிறகு வருகிற 12-ஆம் தேதி காலை 6.00 மணி முதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீண்டும் கருவறைக்கு எடுத்துச்செல்லப்படும். இதை முன்னிட்டு, வருகிற 12-ஆம் தேதி அதிகாலை 3.30 மணிக்கே சந்நிதி திறக்கப்படும். இந்தப் பணிகள், கரூரைச் சோ்ந்த முருக பக்தா் அளித்த நன்கொடை மூலம் நடைபெறுகின்றன.
