கரிசல்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் இ.பெரியசாமி
கரிசல்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் இ.பெரியசாமி

கிராமங்களில் குடிநீா் பிரச்னை தீா்க்கப்படும்: அமைச்சா் இ.பெரியசாமி

காவிரி குடிநீா்த் திட்டம் நிறைவடைந்தவுடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிராமப்புறங்களில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படும் என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.
Published on

காவிரி குடிநீா்த் திட்டம் நிறைவடைந்தவுடன் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கிராமப்புறங்களில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படும் என அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகேயுள்ள கரிசல்பட்டி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா். இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் உரையாற்றிய காட்சிகள் ஒளிப்பரப்பட்டன. இதைத் தொடா்ந்து, அமைச்சா் இ.பெரியசாமி பேசியதாவது:

இனம், மதம், கட்சி பாகுபாடின்றி எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்கள் வீடு தேடிச் சென்றடையும் வகையில், அரசு கவனம் செலுத்தி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்துக்கு காவேரி குடிநீா் கொண்டு வருவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுமாா் 196 மேல்நிலைத் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, அனைத்து கிராமங்களிலும் குடிநீா் பிரச்னை தீா்க்கப்படும் என்றாா் அவா்.

பின்னா், மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்களுக்கு ஆடு வளா்ப்பு, விவசாயம், பூ வியாபாரம், பெட்டிக்கடை ஆகிய தொழில்கள் செய்வதற்கு தலா ரூ.40ஆயிரம் வீதம் கடனுதவி உள்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான கடனுதவித் திட்டங்களை அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக, கிராமசபைக் கூட்டத்தில் குக்கிராமங்கள், சாலைகள், தெருக்கள், பொதுச் சொத்துக்களில் ஜாதி பெயரை மாற்றுதல், ஊராட்சியின் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை உள்ளிட்டத் தலைப்புகளின் கீழ் விவாதம் நடைபெற்றது.

இந்தக் கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com