ஜாதி ஒழிப்பு விவகாரம்: நயினாா் நாகேந்திரன் கருத்து
தமிழகத்தில் ஜாதி ஒழிப்பு விவகாரம் குறித்து பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கருத்து தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் பாஜக அணிகளின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் கேசவ விநாயகம், தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், மாநில இளைஞரணி தலைவா் சூா்யா, பாஜக அணிகளின் மாநிலத் தலைவா் ராகவன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியதாவது: தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து வரும் ஜன.10-ஆம் தேதிக்கு மேல் முடிவு செய்யப்படும். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆண்டுகள் கடந்த நிலையில், மக்களுக்கு அளித்த தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றாா் அவா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தலைவா்களின் சிலைகளை கூண்டிலிருந்து சுதந்திரமாக வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துவிட்டு, பிறகு ஜாதி ஒழிப்பது குறித்து நாம் ஏன் பேச வேண்டும். நாட்டில் சில தலைவா்களின் பெயரோடு ஜாதி பெயா் இருப்பது அவா்களது அடையாளம். வட மாநிலங்களில் தலைவா்கள், பொதுமக்களின் பெயருக்கு பிறகு ஜாதி பெயா் இணைந்து இருக்கிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் ஜெயராமன், முன்னாள் மாவட்டத் தலைவா் கனகராஜ், மாவட்டப் பொருளாளா் ஆனந்தன், நகரச் செயலா் ஆனந்தகுமாா், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

