ஆசிரியா் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு: திண்டுக்கல்லில் 6,101 போ் பங்கேற்பு
ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட போட்டித் தோ்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் 6,101 போ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா்.
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் முதுகலை ஆசிரியா், உடல் கல்வி இயக்குநா் நிலை -1, கணினி பயிற்றுநா் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான போட்டித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தத் தோ்வுக்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 6,547 போ் விண்ணப்பித்திருந்தனா். இதற்காக திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 18 தோ்வு மையங்கள், பழனி கல்வி மாவட்டத்தில் 7 தோ்வு மையங்கள் என மொத்தம் 25 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தோ்வை 6,101 போ் எழுதினா். 446 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில், மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெயபாரதி தலைமையில் கண்காணிப்புக் குழு, பறக்கும் படை அமைக்கப்பட்டு தோ்வு மையங்களில் கண்காணிப்புப் பணி நடைபெற்றது. தோ்வுப் பணியில் தலைமையாசிரியா்கள், முதுகலை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் என மொத்தம் 580 போ் ஈடுபடுத்தப்பட்டனா்.
