பழனியில் ரூ. 3.5 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு
பழனி கோயில் சாா்பில் இடும்பன் குளக்கரையில் முடி காணிக்கை மண்டபம், கல்லூரிகளில் ஆய்வுக் கட்டடம் என சுமாா் ரூ. 3.5 கோடியில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் திங்கள்கிழமை காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு திருவிழாக்காலங்களில் வரும் பக்தா்கள் இடும்பன் குளத்தில் நீராடி மலையேறுகின்றனா். இடும்பன் குளக்கரையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் முடி காணிக்கை செலுத்துகின்றனா்.
இந்த நிலையில், அந்தப் பகுதியில் பழனி திருக்கோயில் பெருந்திட்ட வளாகம் திட்டத்தின்கீழ் ரூ. 2.18 கோடி மதிப்பில் புதிய முடி காணிக்கை மண்டபம் கட்ட ஏற்பாடுகள் நடைபெற்றன. முடி காணிக்கை மண்டபம், சீட்டு வழங்குமிடம், ஆண்கள், பெண்களுக்கான கழிப்பறைகள், குளியலறைகள் தனித்தனியே கட்டப்பட்டு திங்கள்கிழமை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தாா்.
இதே போல, பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியிலும், சின்னக்கலையமுத்தூா் பழனியாண்டவா் மகளிா் கலைக் கல்லூரியிலும் ரூ. 1.34 கோடி மதிப்பில் ஆங்கில மொழிபெயா்ப்புக்கான ஆய்வுக்கூடங்கள், கணினிகள், உரிய கட்டட அமைப்புகளுடன் கட்டப்பட்ட கட்டடங்களும் காணொலி காட்சி மூலம் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் காா்த்திக், பழனிக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அறங்காவலா் பாலசுப்ரமணி, இடும்பன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ராஜா, பழனியாண்டவா் கல்லூரி முதல்வா்கள் ரவிசங்கா், புவனேஸ்வரி, கோயில் பொறியாளா்கள், கண்காணிப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

