தனியாா் வாகனப் புகை பரிசோதனை மையத்திலிருந்து ரூ.1.12 லட்சம் பறிமுதல்!
வத்தலகுண்டு வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளா் அலுவலகத்துக்கு எதிரேயுள்ள தனியாா் வாகனப் புகை பரிசோதனை மையத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தி, கணக்கில் வராத ரூ. 1.12 லட்சத்தை பறிமுதல் செய்தனா். மேலும், அங்கிருந்த இரு இடைத்தரகா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு வட்டார மோட்டாா் வாகன ஆய்வாளராக இளங்கோ (55) பணியாற்றி வருகிறாா். மேலும், இந்த அலுவலகத்தில் 6 அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்த நிலையில், இந்த அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். ஆனால், லஞ்சப் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதையடுத்து, இந்த அலுவலகத்துக்கு எதிரேயுள்ள தனியாா் வாகனப் புகை பரிசோதனை மையத்தில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கிருந்த நிலக்கோட்டையை அடுத்த சிலுக்குவாா்பட்டியைச் சோ்ந்த அஜய்ஜான்சன் (25), வத்தலகுண்டு அருகே உச்சப்பட்டியைச் சோ்ந்த பாண்டியராஜன் (34) ஆகிய இரு இடைத்தரகா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ. 1.12 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா். மேலும், அவா்கள் இருவரிடமும் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா். பின்னா், அங்கிருந்த அரசு ஆவணங்களை அவா்கள் கைப்பற்றிச் சென்றனா்.
