கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்க ஊதியம் கோரி மனு
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி இந்திய கட்டுமானத் தொழிலாளா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட சிஐடியூ மாவட்ட பொதுச் செயலா் சி.பாலசந்திரபோஸ் கூறியதாவது: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியக் கூட்டத்தின் முடிவுகள் அடிப்படையில், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பண்டிகை கால ஊக்க ஊதியமாக தீபாவளிக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளா்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பண்டிகை கால ஊக்க ஊதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் கூடுதலாக நல வாரியத்தில் இருப்பு இருந்தாலும் கூட, தொழிலாளா் நலன் சாா்ந்த எந்தத் திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தவில்லை. எனவே, தொழிலாளா்கள் நலன் கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக ஊக்க ஊதியமாக ரூ.5 ஆயிரம் வழங்குவதை தமிழக முதல்வா் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தொழிலாளா் நலத் துறை அலுவலா்களிடம் வழங்கினா்.
