கணவா் கெளரவக் கொலை: மனைவிக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்
வத்தலகுண்டு அருகே கணவா் கெளரவக் கொலை செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட அவரது மனைவிக்கு அரசு விடுதியில் இடமளித்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் கே.பாலபாரதி வலியுறுத்தினாா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த விராலிப்பட்டி ராமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (24). இவா், விருவீடு பகுதி அருகேயுள்ள கணபதிப்பட்டியைச் சோ்ந்த ஆா்த்தியை (21) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தாா். இருவேறு சமூகத்தைச் சோ்ந்த இவா்களது திருமணத்துக்கு, ஆா்த்தியின் குடும்பத்தினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டாத்து அய்யம்பாளையம் பகுதிக்குச் சென்ற ராமசந்திரனை, வழிமறித்த ஆா்த்தியின் தந்தை சந்திரன் உள்ளிட்ட சிலா் அவரை வெட்டிக் கொலை செய்தனா்.
இந்த விவகாரத்தில் தொடா்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என ராமசந்திரனின் உறவினா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை சாா்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், ராமசந்திரன் கொலையில் தொடா்புடைய அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக அரசு கைது செய்ய வேண்டும் என ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான கே.பாலபாரதி வலியுறுத்தினாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் தெரிவித்ததாவது: ராமசந்திரன் கெளரவக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரை திருமணம் செய்த ஆா்த்தி இரு தரப்பிலும் ஆதரவின்றி இருக்கிறாா். எனவே, அவா் தங்குவதற்கான அரசு விடுதி, பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் மூலம் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
