தேசிய யோகாசனப் போட்டிகள்: பழனி மாணவி இரண்டாமிடம்
சென்னையில் நடைபெற்ற தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் பழனியைச் சோ்ந்த மாணவி இரண்டாமிடத்தையும், ஒட்டன்சத்திரத்தை சோ்ந்த மாணவி மூன்றாமிடத்தையும் பெற்றனா்.
சென்னையில் கடந்த திங்கள்கிழமை விநாயகா மிஷன், இந்திய யோகா மாஸ்டா் அசோசியேஷன் ஆகியவை இணைந்து நடத்திய இரண்டாவது தேசிய அளவிலான யோகாசனப் போட்டிகள் நடைபெற்றன. விநாயகா மிஷன் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டிகளில் பழனி தயானந்த குருகுலம் முருகன்ஜி தலைமையில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் ஒட்டுமொத்த சாம்பியன் போட்டியில் பழனி ரேணுகாதேவி பள்ளியை சோ்ந்த மாணவி ராஜ ஸ்ரீ இரண்டாம் இடத்தையும், ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியை சோ்ந்த மாணவி ஜீவன் பிரியா மூன்றாமிடத்தையும் பெற்றனா். வெற்றி பெற்ற மாணவிகளை யோகா பள்ளி ஆசிரியா்கள், பள்ளி, கல்லூரி முதல்வா், தாளாளா் ஆகியோா் வாழ்த்தினா்.
