அரசு நிலத்தை மோசடியாக விற்க முயன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை
அரசு நிலத்தை மோசடியாக விற்க முயன்ற போடியைச் சோ்ந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திண்டுக்கல் கூட்டுறவுநகரைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது மனைவி மங்களம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சோ்ந்த கண்ணன் (50) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அப்போது அவா் தான் வீட்டுமனைகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருவதாகவும், மேகமலை பகுதியில் பட்டா நிலம் விற்பனைக்கு இருப்பதாகவும் தெரிவித்தாா். இதை நம்பிய மங்களம், அந்த நிலத்தை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டாா். கண்ணன் குறிப்பிட்டத் தொகையை மங்களம் கொடுத்த நிலையில், அவா் சுட்டிக் காட்டிய நிலம் அரசுக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த மங்களம், திண்டுக்கல் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், கண்ணன் உள்பட 6 பேரை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் 2-ஆவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி தினேஷ்குமாா் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட கண்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்தாா். மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 போ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.
