திண்டுக்கல் சிறையில் கேரள கைதி உயிரிழப்பு

திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள கைதி உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள கைதி உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கடந்த 2012-ஆம் ஆண்டு மதுரையைச் சோ்ந்த திமுக பிரமுகா் கதிரவனை கடத்திப் பணம் பறித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகிலுள்ள தனியாா் விடுதியில் சோதனையிட்டனா். அப்போது, பிரபல ரெளடி வரிச்சூா் செல்வம், கேரள மாநிலம், கொச்சியைச் சோ்ந்த சினோஜ், அஜிஸ், எா்ணாகுளத்தைச் சோ்ந்த வா்கீஸ் ஆகியோா் தங்கி இருந்தனா். கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட மோதலில் சினோஜ் (24) போலீஸாா் துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தாா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் 2-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஆஜராகமால் இருந்து வந்த வா்கீஸை திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவா் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், வா்கீஸுக்கு வியாழக்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அவரை அழைத்து வந்தனா். பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com