அய்யலூா் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையையொட்டி, அய்யலூா் வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனையில் ரூ.3 கோடிக்கு வியாழக்கிழமை வா்த்தகம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் வாரந்தோறும் வியாழக்கிழமை வாரச் சந்தை நடைபெறுகிறது. இந்த சந்தைக்கு, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை, எரியோடு, வேடசந்தூா், குஜிலியம்பாறை, நத்தம் உள்ளிட்ட பகுதிகள் மட்டுமன்றி திருச்சி மாவட்டம், வையம்பட்டி, மணப்பாறை உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளிலிருந்தும் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தையில் ஆடுகள் வாங்குவதற்கு, திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் வருகின்றனா். திங்கள்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டவுள்ள நிலையில், அய்யலூா் சந்தையில் செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளி விற்பனையாக வியாழக்கிழமை ஒரே நாளில் ஆடுகள் விற்பனை மூலம் சுமாா் ரூ.3 கோடிக்கு வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

