கொடைக்கானல் சாலைகளில் விற்பனைக்காக ஜல்லிக்கற்கள் குவிப்பு: போக்குவரத்துக்கு நெருக்கடி
கொடைக்கானல் சாலைகளில் கட்டடம் கட்டுவதற்கு தேவையான மணல், செங்கல், ஜல்லிக்கற்களை குவித்து விற்பதால் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும், இவற்றை அகற்ற நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினா்.
கொடைக்கானலில் தற்போது அதிக அளவில் கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தரைப் பகுதிகளிலிருந்து கட்டடங்கள் கட்டத் தேவையான மணல், எம். சாண்ட், செங்கல், ஹாலோ பிளாக், ஜல்லிக்கற்கள் உள்ளிட்டவற்றை வாகனங்களில் ஏற்றி வந்து கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலையில் உள்ள லாஸ்காட் சாலை,க ல்லறை மேடு, மூஞ்சிக்கல், பெருமாள் மலை, அப்சா்வேட்டரி உள்ளிட்ட பகுதிகளில் குவித்து வைத்து விற்கின்றனா். மேலும், அந்தப் பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களையும் ஆக்கிரமித்துள்ளனா். இதனால் வாகனப் போக்குவரத்தில் நெருக்கடி ஏற்படுகிறது.
எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மலைச் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டட உபகரணப் பொருள்களை குவித்து விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.
