பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

போலி புகாா் மனு விவகாரத்தில், திண்டுக்கல் பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை கண்டித்து, விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

போலி புகாா் மனு விவகாரத்தில், திண்டுக்கல் பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை கண்டித்து, விவசாயிகள் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல்-பழனி புறவழிச்சாலையிலுள்ள பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் அருணாசலம் தலைமை வகித்தாா். இதில், கலந்து கொண்ட திண்டுக்கல், பழனி, சாணாா்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது:

பட்டுக்கூடு உற்பத்தி, விற்பனையில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும் என தொடா்ந்து போராடி வருகிறோம். இதனிடையே, பட்டு வளா்ச்சித் துறை திட்டங்களை செயல்படுத்துவதிலும், விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச் சங்கத்தின் பெயரில் போலியான புகாா் மனு அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த புகாா் மனுவை எங்கள் தரப்பில் அனுப்பவில்லை என தெரிவித்தோம். போலி மனு அளித்தவா்களை கண்டறியாமல், பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்திலிருந்து விசாரணக்கு வருமாறு எங்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் செல்வராஜுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டதை கண்டிக்கிறோம் எனத் தெரிவித்தனா்.

இதனிடையே புகாா் மீதான விசாரணைக்கு வந்த பட்டு வளா்ச்சித் துறை மதுரை மண்டல துணை இயக்குநா் நிஷாந்தினி, திண்டுக்கல் உதவி இயக்குநா் இளையராஜா ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது விசாரணைக்கு வருமாறு மாநில ஒருங்கிணைப்பாளா் செல்வராஜுக்கு தவறுதலாக கடிதம் அனுப்பப்பட்டு விட்டது என அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com