திண்டுக்கல்
நிரம்பும் வரதமாநதி அணை: வெள்ள அபாய எச்சரிக்கை
வரதமாநதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறையினா் செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.
பழனி: வரதமாநதி அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறையினா் செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள கொடைக்கானல் மலையடிவாரத்தில் வரதமாநதி அணை உள்ளது. கடந்த சில நாள்களாக கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் மழையால், இந்த அணை முழு கொள்ளளவான 66.47 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், அணையின் உபரிநீா் செல்லும் பகுதியான வரட்டாறு, பாலாறு, சண்முகாநதி ஆகிய பகுதிகளில் உள்ள கரையில் வசிக்கும் மக்களுக்கு பொதுப் பணித் துறையினா் செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.
மேலும், பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கரையோரப் பகுதிக்கு ஓட்டிச் செல்லக் கூடாது எனவும் தெரிவித்தனா்.
