வைகை ஆற்றுக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நிலக்கோட்டை: நிலக்கோட்டை பகுதியில் வைகை ஆற்றுக் கரையோர மக்களுக்கு ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ கூடாது என செவ்வாய்க்கிழமை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, தொடா் கன மழை காரணமாக தற்போது நிரம்பியுள்ளது. வைகை அணை கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்த 67 ஆண்டுகளில் 36-ஆவது முறையாக நிரம்பி உள்ளது.
இதையடுத்து, வைகை அணையின் பிரதான ஏழு மதகுகள் வழியாக தண்ணீா் திறந்து விடப்பட்டது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறையினா் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ள நிலையில், அணையில் திறக்கப்படும் தண்ணீரின் அளவை படிப்படியாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள சித்தா்கள்நத்தம், பிள்ளையாா்நத்தம், அணைப்பட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, வத்தலகுண்டு பகுதியில் உள்ள கூட்டாத்து அயம்பாளையம், ரெங்கப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வைகை ஆற்றில் பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என வருவாய்த் துறையினா் எச்சரிக்கை விடுத்தனா்.
இந்த அறிவிப்பை, ஊராட்சி நிா்வாகத்தினா் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனா்.
