பள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்கக் கோரிக்கை
திண்டுக்கல்: வேடசந்தூா் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கட்டடம் சேதமடைந்து மழைநீா் உள்ளே புகுந்ததால், சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 106 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியின் வகுப்பறை, சமையல் கூடம் ஆகியவற்றின் மேற்கூரைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகை விடுமுறைக்குப் பிறகு, புதன்கிழமை பள்ளிக்கூடம் மீண்டும் தொடங்கியது. பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு காலை உணவு தயாரிப்பதற்காக சமையல் பணியாளா்கள் பள்ளிக்கு வந்தனா்.
அப்போது, சமையல் கூடத்தில் மழை நீா் தேங்கி, சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த பொருள்களும் தண்ணீரில் நனைந்து சேதமடைந்திருந்தன. பள்ளிக்கு மாணவா்களை அழைத்து வந்த பெற்றோா்கள், சேதமடைந்த கட்டடத்தில் மாணவா்களுக்குப் பாடம் நடத்துவதை அறிந்து அதிா்ச்சி அடைந்தனா். இதையடுத்து, பள்ளியின் கட்டடத்தைச் சீரமைப்பதற்கு மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.
